அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் அந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ல் தேதியில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தொடங்கி இதுவரையில் அந்த ஆட்சிக்கு எதிராக போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தது. இந்நிலையில் சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைது செய்வதோடு, சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் மியான்மரின் கிழக்கு பகுதியில் கயா மாகாணத்திலுள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 30 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது, “மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் ராணுவத்துக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றபோது, அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து அழைத்து சென்றனர். அதன்பின் அவர்கள் கைது செய்த 30 பேரின் கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றனர். மேலும் அவர்களுடைய உடல்களில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்” என்று அவர் கூறினார்.