மியான்மரில் உள்ள யாங்கூன் நகரின் 2 முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்ற அடக்குமுறைகள் கையாளப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் ராணுவத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் யாங்கூனில் உள்ள இரண்டு பகுதிகளில் ராணுவ சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்தப்பகுதியில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு படையினர் 22 மக்களை சுட்டுக்கொன்றனர். அப்பகுதியில் உள்ள சீன நிதியுதவி பெறும் தொழிற்சாலைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
மேலும் ஆடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தாக்குதலால் சீன ஊழியர்கள் பலர் காயமடைந்ததாக சீன தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே தான், யாங்கூனில் மக்கள் தொகை அதிகம் உள்ள 2 பகுதிகளில் இராணுவ அமைதியை பராமரிப்பதற்காக அந்நகர ராணுவ தளபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.