மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய பணியாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக மியான்மரில் மாண்டலே என்னும் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கான கண்ணீர்புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த கொடூர தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு ராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். ஆனால் அதை மீறியும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீதியில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.