மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 9 பேரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியான்மரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது 9 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மியான்மரில் Mandaley என்ற நகரத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் Yangon என்ற நகரில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், Myingyan நகரில் ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து இதுவரை 30 பேர் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது.
அதே நேரத்தில் போராட்டம் நடத்துபவர்கள் மீது ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உலக நாடுகள் மியான்மர் ராணுவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. எனினும் மியான்மர் ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பு, மியான்மரில் மீண்டும் தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களிடம் நாட்டின் அதிகாரம் வழங்கப்படும் என்று இராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.