மியான்மரில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ,7 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் பொது மக்களின் போராட்டங்களை அடக்குவதற்காக, ராணுவம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 260 க்கு அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் பகலின் போராட்டம் நடத்தும் பொதுமக்களை ,ராணுவத்தினர் விரட்டி அடித்தும், இரவு நேரங்களில் அவர்களின் வீட்டிற்குள் புகுந்து ,கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மண்டலே நகருக்கு சென்ற ராணுவத்தினர் அங்குள்ள வீட்டிற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் .
ராணுவத்தினர் மவுங் கோ ஹாஷின் பா என்ற போராட்டக்காரரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது ஹாஷின் பாவின் ஏழு வயது மகளான கின் மோ சிட் என்ற சிறுமி ராணுவத்தினரை பார்த்து பயந்துகொண்டு, அவரின் தந்தையை நோக்கி சென்றார். அப்போது ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் , சிறுமியின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் இதைப்பற்றி இராணுவத்தினர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தன. இந்நிலையில் அவர்கள் கைது செய்த 628 போராட்டக்காரர்களை விடுதலை செய்தனர்.