சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் முக ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் கடந்த 25 ஆம் தேதி மாலை 5: 40 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க கடந்த 4 நாட்களாக 80 மணி நேரத்தையும் தாண்டி மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் முயற்சித்தனர். ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் துளையிடபட்டு பணிகள் நடந்தது.
பாறைகள் கடினமாக இருந்ததால் போர் வெல் உதவியால் துளையிடப்பட்டு பின் ரிக் இயந்திரம் மூலம் அகலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணி நேற்று இரவு நடைபெற்ற போது துர் நாற்றம் வீசியது. அதனை மருத்துவர்கள் அதனை உறுதி செய்தனர். பின்னர் மீட்பு படையினர் இன்று அதிகாலை இறங்கி அவனை சடலமாக மேலே கொண்டு வந்தனர்.
உடனே ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு மணப்பாறை மருத்துவமனை வளாகத்தில் குழந்தை சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியின் அருகே வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட சுஜித் உடலுக்கு அடக்கம் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு, முக ஸ்டாலின் சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! என்று ட்விட் செய்திருந்தார்.