தினகரன் இருக்கும் இடமறிந்து செயல்படவேண்டும் என்று அதிமுக MLA கலைச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார் .
அதிமுகவில் எம்எல்ஏக்களாக பணியாற்றி வரும் ரத்தினசபாபதி,பிரபு கலைச்செல்வன் ஆகிய மூவரும் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அதிமுக அரசு தலைமை கொறடா கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை தலைவரிடம் பரிந்துரை செய்தார்.
அதன்பின் சட்டப்பேரவைத் தலைவர் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், மூவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்கால தடையை பெற்றனர். இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியில் இருந்து பலரும் விலகி அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆதரவை தெரிவித்த நிலையில்,தற்போது விருதாச்சலம் எம்எல்ஏவான கலைச்செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களவைத் தேர்தலில் வாக்குகள் மூலம் மக்கள் நல்ல பாடத்தை புகட்டி விட்டார்கள் என்று டிடிவி தினகரனை மறைமுகமாக விமர்சனம் செய்தார். அதன்பின் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியதை என்னால் ஏற்க முடியவில்லை, அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் அந்த எண்ணத்தால் தான் தற்பொழுது இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது. மேலும்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அவ்வாறே நாங்கள் நடந்து கொள்வோம்.டிடிவி தினகரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து நடந்து கொள்ள வேண்டும் அதுவே அவருக்கு நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.