மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 13ஆம் தேதி இரவு இருவரும் தாங்கள் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். அரவக்குறிச்சி, சேர்த்து பட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்லமுத்து. இவருடைய மனைவி லதா.
இவர்கள் இருவரும் தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அரவக்குறிச்சி தெத்துப்பட்டி இந்திரா நகர் விரிவு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மொபெட்டும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஸ்வநாதன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வினோத்,மாற்றுத்திறனாளியான லதா, செல்வமுத்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரவகுறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மூவரையும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாற்றுத்திறனாளி செல்லமுத்து உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி லதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் வினோத் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செல்வமுத்து அவர் மனைவி லதா ஆகியோரின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், விஸ்வநாதனுடைய உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.