சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையில் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை அங்காடியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 5 ஆயிரம் தள்ளு வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை தவிர மக்கள் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி மக்கள் அதிக அளவில் வெளியே வருவதை தடுக்கும் விதமாக வியாபாரிகளுடன் இணைந்து நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.
தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய யார் முன்வந்தாலும் உடனே அனுமதி தரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை. வீடு வீடாக ஆய்வு செய்யும்போது மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல்நலப் பிரச்னைகளை கூற வேண்டும் என அவர் தகவல் அளித்துள்ளார்.