பிரிட்டன் மகாராணியார், துபாய் மன்னர் தன்னோடு குதிரைப் பந்தயத்தைக் காண தடை விதித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசி தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே, பிரிட்டன் மகாராணியார் இந்த தடையை விதித்திருக்கிறார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமராகவும் உள்ள ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமிற்கும், அவரின் மனைவியான இளவரசி ஹயாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஹயா துபாயை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார்.
துபாய் மன்னர், அவரின் மனைவியை பிரிந்தார். இந்நிலையில், குழந்தைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வந்தது. அதன்பின்பு, பிள்ளைகள் தாயிடம் இருக்கவேண்டும் என்று தீர்ப்பானது. இந்த வழக்கை, அரச குடும்பம் மற்றும் பிரபலங்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் Fiona Shackleton தான் நடத்தினார். மேலும், இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில், துபாய் மன்னர் ஷேக் மொஹ்மத், தன் முன்னாள் மனைவி ஹயா, அவரின் வழக்கறிஞர் Fiona போன்றோரின் தொலைபேசிகளை ஹேக் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உயர்நீதிமன்றம், அவர்களின் மொபைல்களிலிருந்து, மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் உட்பட அனைத்தும் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளது.
துபாய் மன்னரும், அவரின் மனைவியும், பிரிட்டன் மகாராணிக்கு நெருங்கிய நண்பர்கள். எனினும், தற்போது, தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட பிரச்சனை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மகாராணியார் துபாய் மன்னருடனான நட்பைத் துண்டிக்க வேண்டும் என்று பலரும் கூறிவருகிறார்கள்.
அரசக்குடும்பம், இங்கிலாந்தின் Ascot என்ற இடத்தில் நடக்கும் குதிரைப் பந்தயங்களை அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட, பிரத்யேக இடத்தில், அமர்ந்து பார்க்கும்போது, துபாய் மன்னரின் குடும்பத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், இந்த பிரச்னைக்கு பிறகு தங்கள் குடும்பத்தோடு அமர்ந்து, போட்டியைக்காண துபாய் மன்னருக்கு அனுமதி இல்லை என்று மகாராணி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.