Categories
நாமக்கல் மற்றவை மாவட்ட செய்திகள் விளையாட்டு

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை.

ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் காளைக்கு பதிலாக கோழி, காளையர்களுக்கு பதிலாக பெண்கள் கோழியை பிடிக்க வேண்டும். கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த நவீன ஜல்லிக்கட்டில் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. காளையைகூட பிடித்துவிடலாம். கோழியை பிடிப்பது கடினம். ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும் அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியை பிடிக்க வேண்டும். கயிற்றை கையில் பிடித்தோ, காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பது நிபந்தனை. சீறிவரும் காளையை பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக்கொண்டு கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டாகும்.

இந்த போட்டியில் பெண்கள், சிறுமிகள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த நவீன ஜல்லிக்கட்டு அந்தப் பகுதி மக்களிடம் பிரபலமடைந்துள்ளது.

 

Categories

Tech |