மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா நிறுவனமான மாடர்னா கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி நோயாளிக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துவ பரிசோதனையின் 34 தன்னார்வலர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்துள்ளனர். அப்போது கொரோனா வைரஸை தடுக்கும் ஆண்டிபாடிகள் மனித அணுக்களில் இருந்து வெளியானது தெரியவந்துள்ளது. இந்நிலையில் எதிர்பார்த்தபடி நாளடைவில் அந்த கொரோனா ஆண்டிபாடிகள் சற்று குறைந்தன.
ஆனால் எதிர்ப்பு சக்தியானது மூன்று மாதங்களுக்கு, சோதனையில் ஈடுபட்ட அனைத்து தன்னார்வலர்களிடமும் உயர்ந்த வண்ணம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா உருவாக்கிய தடுப்பூசிக்கு எம்.ஆர்.என்.ஏ.-1273 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தானது இரண்டு டோஸ்களாக 28 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.