கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து விலை மலிவானதாகவும் சர்வதேச அளவில் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்
உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தடுப்பு மருந்தை கண்டறிய சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் களமிறங்கி தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை கண்டறிய தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பணிகளை மத்திய அரசும் ஊக்குவித்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை தயாரிக்கும் திட்டம் மற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதமரிடம் தடுப்பூசி குறித்த நிலவரத்தை விளக்கிக் கூறினர். அப்போது கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிபுணர்களுக்கு கூறிய பிரதமர் பல அறிவுறுத்தல்களையும் அவர்களுக்கு வழங்கினார். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி போடும் அளவிற்கு வினியோகம் அமைய வேண்டும் என்றும் ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்குதல், களத்தில் நின்று போராடுபவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் படி அமைய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் நான்கு வழிகள் கொள்கையும் பிரதமர் மோடி விளக்கியுள்ளார். அதனடிப்படையில் முதலாவதாக விரைவில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட வேண்டும். எடுத்துக்காட்டாக களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் மருத்துவம் சாராத கொரோனா போராளிகள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இரண்டாவதாக தடுப்பூசி போடுவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும்.
மூன்றாவது தடுப்பூசி விலை மலிவானதாகவும் சர்வதேச அளவில் சிறப்பு மிக்கதாகவும் அமைந்திருக்க வேண்டும். அதோடு யாரும் தடுப்பூசி போடுவதில் இருந்து விடுபடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நான்காவது தடுப்பூசி உற்பத்தி செய்வது முதல் அதன் பயன்பாடு வரை அனைத்து நடவடிக்கைகளையும் நவீன தொழில்நுட்பம் மூலமாக உரிய சமயத்தில் கண்காணித்து ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய நேரத்தில் சக்தி வாய்ந்த சிறப்புமிக்க தடுப்பூசி போடுவது தேசத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இத்தகைய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கான விரிவான திட்டமிடலை உடனடியாக தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.