அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவை பல நடவடிக்கைகள் எடுத்ததாக மோடி அக்டோபர் 27ஆம் தேதி நடந்த மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
மக்களவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்படி பாஜக தன் கட்சியினரிடையே தெரிவித்துள்ளது. தீர்ப்பு ஆதரவாக இருந்தாலும் எதிராக இருந்தாலும் அதனை கொண்டாடவோ எதிர்க்கவோ வேண்டாம் எனவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கைத் திரும்பப் பெறவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதிர்ச்சியடைந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.