Categories
அரசியல் தேசிய செய்திகள்

”பொருளாதார புரிதல் மோடிக்கு இல்லை” – ராகுல் காந்தி கடும் விமர்சனம் …!!

மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்துவிட்டது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கித்தரவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மோடி மக்களவையில் பேசும் போது ‘தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஒரு மோசமானத் திட்டம்’ என்றார். அவருக்கு பொருளாதாரம் குறித்த புரிதலே இல்லை. அமெரிக்காவில் இருந்து வந்த பொருளாதார நிபுணர்களுடன் நான் சந்தித்து பேசினேன்.

அப்போது 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்தது, தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டமும், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடியும்தான் என்றனர். அந்த திட்டங்கள் ஏழை, எளிய மக்களின் கைகளில் பணம் இருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் பாஜக அரசு ஏழை, நடுத்தர மக்களின் கைகளில் பணம் இருப்பதை விரும்பவில்லை. அதற்கேற்றார் போல் திட்டங்களை பாஜக வகுத்துவருகிறது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் மோடி அரசு பெரு முதலாளிகளுக்கு கடன்களை அள்ளி வழங்குகிறது, அவர்களுக்கான வரியை குறைக்கிறது. அவர் மக்களுக்காக செயல்படாமல் முதலாளிகளுக்காக செயல்படுகிறார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மையும், விவசாயிகளின் தற்கொலையும் அதிகரித்துள்ளது. இதனைப்பற்றியெல்லாம் பேசாத ஊடகங்கள் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மோடியின் ஆட்சியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றிப் பேசாமல்; அதிலிருந்து மக்களை திசைத்திருப்பும் வேலையைச்செய்து வருகின்றன. ஊடகத்திலுள்ளவர்கள் தங்கள் வேலையை பாதுகாத்துக்கொள்வதற்காக உண்மையை பேசாமல் இருக்கிறார்கள்’ என்றார்.

Categories

Tech |