வரும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல், அதானிக் குழுமத் தலைவர் கவுதம் அதானி, மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், எல். அண்டு டி தலைவர் ஏ.எம். நாயக் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது நாட்டில் நிலவிவரும் பொருளாதாரச் சிக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டங்களைப் பிரதமர் தொழிலதிபர்களிடம் கேட்டறிந்தார்.
வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களைப் பிரதமர் மோடி சந்தித்து வருகிறார்.
முன்னதாக வங்கித்துறை சார்ந்த அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் மோடி, கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களைச் சந்தித்துள்ளார்