வேலூரில் கையூட்டு பெற்ற தனித்துணை ஆட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் இருங்குழியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் நில பதிவின்போது முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக தெரிகிறது. இதனை விசாரித்த கண்ணமங்கலம் சார் பதிவாளர் தனித்துணை ஆட்சியர் தினகரனை பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த தினகரன் ரஞ்சித்குமார்க்கு சொந்தமான நிலப்பத்திரத்தை விடுவிக்க கையூட்டு கேட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் ரஞ்சித்குமார் புகார் அளித்துள்ளார்.
அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரஞ்சித்குமார் ரசாயனம் தடவிய ஐம்பதாயிரம் ரூபாயை தினகரனுக்கு கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காரில் தப்பி ஓடிய தினகரனை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் ஓட்டுநர் ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.