கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூரில் அழகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதிரா தேவி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உதிரா தேவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்தி, உதிரா தேவியிடம் குடும்ப விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து தான் பலருக்கு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும், முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் உங்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய உதிரா தேவி செல்போன் செயலி மூலம் 20,000 பணத்தை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் வேண்டும் என அந்த நபர் கேட்டவுடன் உதிரா தேவி அந்த பணத்தையும் அனுப்பியுள்ளார். சில நாட்கள் கழித்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி எனக்கூறி உதிரா தேவியின் வீட்டிற்கு வந்த வாலிபர் “உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து உங்களது புகைப்படம் தேவைப்படுகிறது. எனவே கழுத்தில் இருக்கும் நகையை கழற்றி வையுங்கள் என கூறியுள்ளார்.
அவர் கூறியதை நம்பி உதிரா தேவி 3 பவுன் நகையை கழற்றி மேஜையில் வைத்துள்ளார். பின்னர் வாலிபர் தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டதால் உதிரா தேவி சமையலறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது நகை மற்றும் செல்போன் ஆகியவற்றுடன் வாலிபர் மாயமானதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உதிரா தேவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 60 ஆயிரம் ரூபாய் பணம், 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை, செல்போன் ஆகியவற்றை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.