வெளிநாட்டு கப்பல்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்தது குறித்த புகார் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர் பகுதியில் வசிக்கும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான மைக்கேல்ராஜ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அதன்பின் மைக்கேல்ராஜிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முகமது ஜாபித் என்பவரிடம் 50 ஆயிரம், அந்தோணி ரூபனிடம் 2 லட்சம், மரிய ஜோஸ் ஸ்டனியிடம் 3 லட்சத்து 30 ஆயிரம், பிரியத்திடம் 50 ஆயிரம், சுந்தரராஜ், மெக்வின், மரிய அண்டு ராஜனிடம் தலா 1 லட்சமும், சாமுவேல் டாக்டரிடம் 43 ஆயிரத்து 300 என மொத்தமாக 10 லட்சத்து 20 ஆயிரத்து 300 ரூபாய் பண மோசடி செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மைக்கேல் ராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.