பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில் நகர் ஏர்போர்ட் பகுதியில் டாக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜேந்திரன் பஞ்சப்பூர் பகுதியில் வெல்கர் இன்டர்நேஷனல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புதிதாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் வசிக்கும் முகமது சபீர் என்பவர் இந்த மருத்துவமனையில் கேண்டீன் நடத்துவதற்காக 18 லட்ச ரூபாயை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார்.
அதன்பின் ராஜேந்திரன் மருத்துவமனை கட்டும் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு முகமது சமீர் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததோடு, ராஜேந்திரன் முகமதை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.