கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை குறிஞ்சி நகரில் கார் டிரைவரான சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், தனது பெயர் முருகன் எனவும், தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உங்களது செல்போன் எண் குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த நீங்கள் சென்னை வரவேண்டும் என சுரேந்தரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த பிரச்சனையை தீர்க்க 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அச்சத்தில் சுரேந்தர் அந்த நபருக்கு 5 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் சுரேந்தரை தொடர்புகொண்ட அந்த நபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேந்தர் கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.