வங்கி கணக்கை முடக்கிய தனியார் நிறுவன அதிகாரியிடமிருந்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்நாதன் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஸ்பின்னிங் மில்லில் இருந்து தொடர்பு கொண்டு செந்தில்நாதனிடம் பணத்தை கேட்டுள்ளனர். அதன் பின் தான் கொடுக்க வேண்டிய 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை செந்தில்நாதன் ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி ஸ்பின்னிங் மில்லில் இருந்து செந்தில்நாதனை மீண்டும் தொடர்பு கொண்டு பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு செந்தில்நாதன் தான் ஏற்கனவே பணத்தை செலுத்தி விட்டதாக கூறியுள்ளார். அதன் பின் அந்த மில்லை சேர்ந்தவர்கள் பணம் தங்களுக்கு வரவில்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் செந்தில்நாதன் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் செந்தில்நாதனின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.