இணையதளம் மூலம் பெண்ணிடம் இருந்து 2 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் சோனியா என்பவர் வசித்து வருகிறார். அவரது செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சோனியா அந்த லிங்கில் நுழைந்து பதிவு செய்வதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு இணையதளத்தில் சோனியா 300 ரூபாய் முதலீடு செய்ததால் அவருக்கு 330 ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சோனியா 2 லட்சத்து 54 ஆயிரத்து 750 ரூபாய் வரை அதில் முதலீடு செய்துள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்காததால் அது போலியான இணையதளம் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சோனியா மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.