தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்ன ராஜ், தேவசகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 1/2 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கை திரும்ப பெறுவதற்காக லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டு வழக்கு தொடர்ந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்கு பதியப் பட்டுள்ளது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறினார். மேலும் இரு தரப்பு வாதங்களும் முடிவடையாத காரணத்தினால் நீதிபதி வழக்கை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.