தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி பகுதியில் சூடம்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான முனியப்பா இறந்துவிட்டதால் சூடம்மா தனது மகனான திம்மராஜ், மருமகள் சரஸ்வதி ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூடம்மா இரவு நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மகன் திம்மராஜ் எதிர்பாராதவிதமாக எழுந்து வந்து பார்த்த போது சூடம்மா பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனால் திம்மராஜ் சத்தம் போட்டதும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனையடுத்து அருகில் சென்று பார்த்தபோது சூடம்மா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திம்மராஜ் குருபரப்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூடம்மாவின் மகன் திம்மராஜ் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகைக்காக மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சூடம்மாவின் உடலை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி காவல்துறையினர் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.