மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவம்பலபுரம் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதம் இறந்து விட்டதால் வள்ளியம்மாள் தனது மகன் மாடசாமியின் வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அறையில் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் கடந்த 8-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகன் மாடசாமி கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான புரோஸ்கான் என்பவர் வள்ளியம்மாளை கொடூரமாக கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் புரோஸ்கானை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் புரோஸ்கான் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேலை சரியில்லாத காரணத்தால் வள்ளியம்மாளிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தேன். தற்போது வட்டியை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வள்ளியம்மாள் வீட்டிற்கு வட்டி கேட்டு வந்தார். நான் அவரிடம் வீட்டிற்கு வந்து கொடுக்கிறேன் என கூறினேன். ஆனால் வள்ளியம்மாள் மீண்டும் எனது வீட்டிற்கு வந்து உடனடியாக வட்டியை தருமாறு கேட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வள்ளியம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என புரோஸ்கான் வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.