மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவரை இழந்த பத்திரகாளி தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்ரகாளிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பத்திரகாளியை அவரது குடும்பத்தினர் யாரும் கவனிக்காததால் மனமுடைந்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பத்திரகாளியை உடனடியாக மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் பத்ரகாளி அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி பத்ரகாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.