மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி. புதூர் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகமணிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால் உறவினர்கள் நாகமணிக்கு தினமும் உணவு கொடுத்து வருவது வழக்கம். இந்நிலையில் உறவினர்கள் சாப்பாடு கொடுப்பதற்காக நாகமணி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நாகமணி கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து நாகமணி வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. மேலும் நாகமணி கைகளில் அரிவாள் வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளார். இதுகுறித்து நாகமணியின் உறவினர்கள் திருப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு வாயில் துணியை வைத்து திணித்து நாகமணி அணிந்திருந்த 1\2 பவுன் கம்மல், பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நாகமணியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் சம்பவத்தில் ஈடுபட்டது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.