மூதாட்டியிடம் நகை பறித்த 2 இளம்பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை பகுதியில் செல்லகுட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் திருநெல்வேலியில் பொருட்களை வாங்கி விட்டு டவுன் பேருந்தில் பத்தமடை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பத்தமடை பேருந்து நிறுத்தத்தில் செண்பகம் இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருந்த 2 பெண்கள் இழுத்து அறுத்தது தெரியவந்துள்ளது. இதனால் செண்பகம் கூச்சலிட்டார். இந்நிலையில் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அந்த பெண்ணுக்கு பின்னால் இருந்த 2 பெண்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த 2 பெண்களும் நாங்கள் திருடவில்லை என கூறிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் மற்ற பயணிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த 2 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் செயினை திருடியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த 2 பெண்களையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த செயினையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மணப்பாறை பகுதியில் வசிக்கும் பிரியா, சுப்பு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.