காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மணிமுத்து-சிவனம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமுத்து இறந்து விட்டதால் சிவனம்மாளை அவரது உறவினர்கள் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவனம்மாள் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் சிவனம்மாளின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.