சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தினர் மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர். அதன்பின் அவர்கள் மூதாட்டியிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது என் மகன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இங்கு கொண்டு வந்து விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி அரக்கோணம் காவல்துறையினருக்கு தொண்டு நிறுவனத்தினர்கள் தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியை அழைத்து கொண்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் மூதாட்டியின் உறவினர்கள் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து வெளியூரில் இருக்கும் மூதாட்டியின் மகனுக்கு தொடர்புகொண்ட காவல்துறையினரிடம் அவரது மகன் எனது தாய் பல வருடங்களுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் தொண்டு நிறுவனத்தினர்கள் மூதாட்டியை சென்னையில் உள்ள காப்பகத்தில் கொண்டு சேர்த்துள்ளனர்.