மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கன்னிமார்கூட்டம் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாடசாமி இறந்துவிட்டதால் மூக்கம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் மேலப்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி கணேசன் தனது தாயை பார்க்க வந்துள்ளார். அப்போது கணேசன் மூக்கம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு மூக்கம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மூக்கம்மாளை கம்பால் அடித்துள்ளார். இதில் மூக்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பின் கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சூரங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூக்கம்மாளின் உடலை கைப்பற்றி விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கணேசனை தேடி வந்தனர். இந்நிலையில் கணேசன் மதுரையில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.