மூதாட்டியிடம் தயிர் வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டி ரிங்ரோடு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பரிமளா வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் இறங்கி பரிமளாவின் கடையில் தயிர் கேட்டுள்ளார். இதனையடுத்து பரிமளா தயிரை அந்த வாலிபருக்கு கொடுத்து விட்டு மீதி சில்லறையை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வாலிபர் திடீரென பரிமளா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து பரிமளா வேலம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.