குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோர்பி பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் ஓரேவா நிறுவனம் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜெய்சுக்பாய் படேல் இன்னும் 10 வருட காலத்திற்கு மோர்பி பாலம் நிலைத்து நிற்கும் என்று கூறியிருந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்த நாளிலிருந்து அவர் தலைமறை வாகி விட்டார். இதன் காரணமாக ஜெய்சுக்பாய் படேல் உட்பட 9 அதிகாரிகள் மீது வழக்குபபதிவு செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு எதிரான ஆதாரங்களும் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்கு காரணமானவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகி வாதாடக்கூடாது என்று தற்போது புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.