அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதுங்கி இருந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அப்துல் சமீம் உட்பட பல தீவிரவாதிகளுக்கு கர்நாடகாவில் மேலும் பலர் அடைக்கலம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக போலீசாரும், தமிழக கியூ பிரிவு போலீசாரும் இணைந்து அதிரடி வேட்டை நடத்தி தீவிரவாதிகளுக்கு உதவிய 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அவர்களிடம் தமிழகத்தில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க 17-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் தகவல்கள் பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.இந்த தீவிரவாதிகள் குடியரசு தினத்தன்று (நாளை 26ஆம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் குண்டு வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் 1,00,000 குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு ஏற்கனவே போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அச்சுறுத்தல் இருப்பதால் குடியரசு தினவிழாவை யொட்டி நாளை தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.