கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கல்லூரியில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்காததால் ஏராளமானார் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாலிபர்கள் கேட்டை திறந்து உள்ளே முண்டியடித்து சென்றனர்.
அப்போது நெரிசல் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவர்களும், பெண்களும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த 4 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வாலிபர்களை தடுக்க முயன்ற போலீ ஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலோமினா காயம் அடைந்தார். மேலும் விஸ்வாபுரத்தில் வசிக்கும் மாணவிகளான நந்தினி(20), ஐஸ்வர்யா(18), ஹரிணி(17), பத்தாம் வகுப்பு மாணவி ஹரிசியா உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.