கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கி வருகிறது
நைஜீரியாவில் கடந்த 2 மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் (Lassa fever) தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் முகமது அபுபக்கர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நாங்கள் (அரசு) தொடங்கியுள்ளோம். மக்கள், எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். அவற்றின் மூலமாகவே இந்த நோய் பரவுவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்த பிரச்சாரம் மூலம் நாட்டில் சுகாதாரம் மோசமாக இருக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும். இதுவே நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி’ என்று கூறினார்.
நைஜீரியாவின் லாசா நகரில் 1969-ஆம் ஆண்டு இந்த வைரஸ் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டதால், அதற்கு ”லாசா காய்ச்சல்” என்று பெயரிடப்பட்டுள்ளது . லாசா காய்ச்சல் என்பது வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான இரத்தக்கசிவு நோயாகும்.