தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேரும், செங்கல்பட்டு மற்றும் மதுரையில் தலா 5 பேரும், காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,162 ல் இருந்து 2,323 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று யாரும் கொரோனாவால் பலியாகவில்லை. இதனால் பலியானோரின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 27 ஆக இருக்கிறது.. அதேபோல தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்தனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,258 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.