ராமநாதபுரத்தில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராசு, பொருளாளர் ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முத்து ராமு, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் நாகநாதன், செயலாளர் அருள்சாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், விவசாயிகள் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான நாகூர் பிச்சை, வக்கீல் தனபால், விவசாய சங்க உறுப்பினர் உத்திரகுமார், மணிகண்டன் உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.