ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒடிசாவில் 1,58,640 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பல் புயல் தற்போது 160 முதல் 170 கி.மீ வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடக்கிறது.
ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மேற்குவங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 27 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் முழுமையாக கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக மேற்குவங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளில் முப்படைகளையும் அரசு உஷார் நிலையில் வைத்துள்ளது.
இந்த புயலால் மேற்குவங்கத்தின் 7 மாவட்டங்கள் நேரடியாக பாதிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் 1,500 கர்ப்பிணிகள் உள்பட சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.