தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே பிற நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் அதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய அவர், உயிரிழந்தவர்களில் 50% -திற்கும் அதிகமானோர் முதியவர்களே என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே இல்லாத அளவு தமிழகத்தில் தான் இதுவரை 4,21,480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
41 அரசு பரிசோதனை மையங்களும், 27 தனியார் பரிசோதனை மையங்களும் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை பிற மாநிலங்களில் இருந்து வந்த 942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 88% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.