கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகள் முன்னால் குடியிருப்பு பள்ளிக்கூடம் அமைந்திருந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அரசு மற்றும் மத அமைப்புகளால் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுவர்களை தங்களது சமூகத்திற்கு மாற்றும் முயற்சியாக குடியிருப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. மேலும் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அந்த பள்ளிக்கூடங்களில் அவர்களது குடும்பத்திலிருந்து கட்டாயமாக பிரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது சமூகத்துடன் மீண்டும் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பல பழங்குடியினர் உரிமை அமைப்புகளும் பழங்குடியின சிறுவர்களுக்கு அந்த பள்ளிக்கூடங்களில் இழைக்கப்பட்ட அநீதி குறித்து உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 215 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் முன்னால் குடியிருப்பு பள்ளிக்கூடமான இந்தியன் ரெசிடென்சியல் பள்ளியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கனடாவில் உள்ள சஸ்கட்செவான் மாகாணத்தில் ஒரு முன்னாள் குடியிருப்பு பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தி கவொசெஸ் ஆப் பஸ்ட் நேஷன்ஸ் எனும் பழங்குடியின உரிமை அமைப்பு, இதுவரை மொத்தம் 751 சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பள்ளிக்கூடத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் தெரிவித்துள்ளது.