பிரான்சில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கத்தோலிக்க மதகுருமார்களால் சீரழிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் இந்த வன்கொடுமைகளில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இதுவரை 330,000 குழந்தைகள் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதில் 10 முதல் 13 வயதிற்குள் உள்ள சிறுவர்கள் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதை விட ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரான்ஸ் தேவாலயங்களில் கடந்த 70 வருடங்களில் சுமார் 2,900 முதல் 3,200 பீடோபில்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜீன் மார்க் சாவ் தலைமையிலான தனியார் விசாரணைக்குழு ஒன்று மேற்கொண்ட விசாரணையில் இந்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிரான்ஸ் மக்களிடத்தில் இந்த விசாரணை அறிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மனித உரிமை அமைப்புகள் தேவாலயங்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குரல்களை எழுப்பி வருகின்றனர்.