தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதால் கொரோனாவை பற்றிய அச்சம் தேவையில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனாவை பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56% பேர் குணமடைந்துள்ளனர், இறப்பு விகிதம் 0.8ஆக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. மக்கள் நெருக்கமாக வாழ்வதால் நோய் தொற்று அதிகம் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என கூறிய அவர், தமிழகத்தில் தான் அதிகம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சரியான சிகிச்சையின் மூலம் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு என தெரிவித்துள்ளார்.