மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை தொப்பம்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தில் ஆறுமுகத்திற்கு பணம் எடுக்க தெரியவில்லை. அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபரும், பெண்ணும் இணைந்து ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளனர். அதன்படி 3000 ரூபாய் பணத்தையும், ஏ.டி.எம் கார்டையும் அந்த வாலிபர் ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற ஆறுமுகத்திற்கு அவரது வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து ஆறுமுகம் தனது மகன் சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் வங்கிக்கு சென்று நடந்தவற்றை கூறி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது உதவி செய்வது போல வந்த அந்த வாலிபரும், பெண்ணும் இணைந்து ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ஜவுளி கடையில் துணி வாங்கியது தெரியவந்துள்ளது.
அதன்பின் ஜவுளி கடை முன்பு நின்று கொண்டிருந்த இருவரையும் சந்திரசேகர் பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் குளித்தலை பகுதியில் வசிக்கும் சரவணக்குமார் மற்றும் கமலவேணி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.