மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் ராமசாமி வட்டம் பகுதியில் ராணுவ வீரரான சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் கவிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். இதனை அடுத்து சம்பத்குமார் பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாட விடுமுறையில் வந்துள்ளார்.
அப்போது சம்பத்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தாமலேரிமுத்தூர் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தில் வாகனம் மோதியது. இந்த விபத்தில் சம்பத்குமார் படுகாயமடைந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.