மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கம்புகாளப்பட்டி கிராமத்தில் விவசாயி ரவி வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 13-ஆம் தேதி அனுமந்தபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சென்றுள்ளார். இதனையடுத்து தன் மகளைப் பார்த்துவிட்டு ரவி காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் தனியார் பேக்கரி கடைக்கு முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ரவி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட ரவி தலையில் பலத்த காயமடைந்தார். அதன்பின் ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைதொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரவி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.