மோட்டார் சைக்கிளில் கன்றுக்குட்டியை திருடிவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் பகுதியில் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் ஒரு கன்று குட்டியை கொண்டு வந்தனர். இதனையடுத்து 3 பேரையும் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்துள்ளனர்.
அதன்பின் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வாலிபர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பேரணாம்பட்டு கள்ளிச்சேரியை சேர்ந்த பாண்டித்துரை, சிவராஜ்புரத்தைச் சேர்ந்த எஜாஸ் அகமது, பேரணாம்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து பேர்ணாம்பட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது வழியில் தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியை திருடி மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு வந்ததாகவும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.