மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் திலகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் திலகராஜ் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திலகராஜ் கரடிவாவியில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று விட்டு பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எலந்தகுட்டை அருகில் திலகராஜ் வரும்போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த திலகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திலகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து லாவண்யா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.