மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சோட்டையன் தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோ திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் முத்துக்குமார் பலத்த காயமடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு முத்துக்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரான ராஜா முகமது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.